தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளில் ஒருங்கிணைந்த கண் வங்கி தொடங்க கோரிக்கை

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளில் ஒருங்கிணைந்த கண் வங்கி தொடங்க கோரிக்கை
First Published : 29 May 2009 03:02:30 AM IST

தருமபுரி, மே 28: தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளில் ஒருங்கிணைந்த கண் வங்கி தொடங்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் பார்வையிழந்தோர்களின் எண்ணிக்கை 810. இவர்களில் கருவிழி குறைபாடுகளால் பாதிக்கப்ட்டுள்ளவர்கள் மட்டும் 173 பேர். இவர்களுக்கு கண் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து மாற்று கண் பொருத்தப்பட்டால் கண் பார்வை மீண்டும் பெறலாம். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 158 பேர் இறந்த பின்பு தங்களின் கண்களை தானமாக கொடுத்துள்ளனர். இவர்களின் கண்கள் பெறப்பட்டு பெங்களூர் அரிமா கண் மருத்துவ வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தருமபுரி பகுதியில் உள்ள பார்வை இழந்தோருக்கு இங்கு பெறப்படும் கண்களை பொருத்தமுடியாமல் போவதற்கு இப்பகுதிகளில் கண் வங்கி மையம் இல்லாததே காரணம் என்பது தெளிவு. தனியார் கண் வங்கிகள் பண நோக்கத்துடன் செயல்படுவதால் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளில் ஒருங்கிணைந்த கண் வங்கியை ஏற்படுத்த அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே பலரது எதிர்ப்பார்பாக உள்ளது. அரசு சார்பில் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறை மூலம் பல்வேறு நலதிட்டங்கள் செயல் படுத்தப்பட்டாலும் பார்வை இழந்தோருக்கு கண் தானம் செய்வதை ஊக்குவிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கண் தானம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. அரசு துறையும், அரசியல் தலைவர்களும் இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முன் வரவேண்டும் என்று தருமபுரி கண் தான மையத்தின் தலைவர் கே.ஏ.மாணிக்கம் கூறினார். இது குறித்து தருமபுரி மாவட்ட லைட் கண் மருத்துவ மனை டாக்டர் பாரிகுமார் கூறியது: இம்மாவட்டத்தில் தருமபுரி, மாரண்டஹள்ளி பகுதியில் மட்டுமே மக்களிடையே கண் தானம் குறித்த விழிப்புணர்வு உள்ளது. மாரண்டஹள்ளி பகுதியில் முனிராசு என்பவரின் முயற்சியால் 80-க்கும் மேற்பட்டோர் கண் தானம் செய்துள்ளனர். குறிப்பாக கண் தானம் குறித்து அரிமா, ரோட்டரி போன்ற தொண்டு நிறுவனங்களே அதிக அளவில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அரசு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. கண் பார்வை இழந்தோர்களுக்கு கண்கள் பொருத்த ரூ.20 ஆயிரம் வரை செலவு ஆகும் என்பதால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் இந்த பயனை பெறமுடியாமல் உள்ளனர். அரசு மருத்துவ மனைகளில் இந்த வகை ஆபரேஷன் செய்வதற்கு 4 மணி நேரம் ஆவதால் இது குறித்து அரசு துறை சார்பில் எவ்வித முயற்சியும் எடுத்துகொள்வதில்லை என்றார் அவர். மாற்றுக் கண் பொருத்த தகுதியுடையவர் என டாக்டர்கள் பரிந்துரைத்தால் எங்கள் துறை மூலம் இதற்கான உதவி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கிறார் மாவட்ட மறுவாழ்வு அலுவலர் ஜோசப் டி.ரவி.

பின்னூட்டமொன்றை இடுக