இணைய (மென்வலை) ஈ-ன்பம்…!

இணைய (மென்வலை) ஈ-ன்பம்

எதற்கு முன்னாலும் ஈ என்ற எழுத்தைச் சேர்த்து விட்டால், அது புதிய நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கான நவீன வார்த்தை என்ற பொருள் இயற்கையாகவே அமைந்து விடுகின்ற ஈ-ஞ்ஞான உலகில் வாழ்கிறோம் நாம். இது ஒரு வகையில் மகிழ்ச்சிதான். இணைய உலகம் உண்மையில் விந்தையானது. ஒரு மனிதனுக்கு, ஓரளவு நேரமும் கிடைத்து, மென்வலையில் அங்கும் இங்கும் சுழன்று வர ஓரளவு புரிதலும் இருந்து விட்டால், உலகையே எம் காலடியில் கட்டிப் போட்டு, கண்முன்னே எதை நினைத்தாலும் உடனே அழைத்து வந்து, அது குறித்த அத்தனை குறிப்பையும் ஐந்து நிமிடத்திற்குள் அச்சில் (Print) கொண்டுவந்து விடலாம் என்றால் இது விந்தை தானே !

தமிழ்நாட்டில் சங்ககால இலக்கியக் கூட்டம், புட்டபத்தியில் சத்ய சாய்பாபா விழா, விஸ்வநாதன் ஆனந்தின் சதுரங்க விளையாட்டு, மெல்போர்னில் காவடி, மல்லாவியில் கண்ணிவெடி, கண்டகாரில் கண்ணீர்ப்புகை என்று எதை வேண்டுமானாலும், நினைத்தவுடன் இழுத்துப் பிடித்து, அது குறித்த அத்தனை தகவல்களையும் சேகரித்து விடக்கூடிய அதிசய உலகம் இந்த மென்வலை. நல்ல நாள் பார்ப்பதற்கு சாத்திரியிடம் போனாலென்ன, திருமண நாதஸ்வரம் ஒழுங்கு பண்ணும் தேவையிருந்தாலென்ன, ஏன், இலங்கையிலிருந்து போயிலையும் கருவாடும் யார் யார் இறக்குமதி செய்கிறார்கள் என்று அறிந்து கொள்ளவும் கூட இந்த மென்வலை உதவி புரிகிறது என்றால் பாருங்களேன்.

ஒரு சில வருடங்களுக்கு முன்னர், மொனிற்றர் (monitor), சி.பி.யூ. (C.P.U.) என்ற சொற்களெல்லாம் பிரபலமாக இருந்த காலம் போய், ரியல் பிலேயர் (Real Player) மேகாபைற் (megabyte), ஈமெயில் (e-mail) என்ற சொற்பதங்கள் பழகிப்போய், கைப்பர்லிங்க் (hyperlink)> ஜாவா (Java) எம்.பி.3 (MP3) என்பவைகூட சாதாரண வார்த்தைகளாகி, இப்போதெல்லாம் மேக் (meg)> ஐபி (IP)> எக்ஸ்.பி..(XP), புரோபைபர் (Profyber)> , ஈ-கொமேர்ஸ் (e-commerce) போன்ற நவீன ஈ-வார்த்தைகள் கூட சிறியவர்கள் வாயிலும் முதியவர்கள் வாயிலும் நுழைந்து, சாதாரண பேச்சுக்களில் பயன்படுத்தப் படுவதைப் பார்க்கக் கூடியதாக உள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்னர், 59 வயது தமிழ்ப் பெண், என்னிடம் கேட்ட கேள்வியை நீங்களும் படித்துப் பார்ப்பது நல்லது. “நீங்கள் அனுப்பிய ஈமெயிலை நான் அவுட்லுக் எக்ஸ்பிரசில் (Outlook Express) ஓப்பின் (Open) பண்ணி, அதன் அற்றாச்மென்டை (Attachment) கிளிக் (Click)பண்ணியபோது மீடியாபிலேயரை (Media Player) டவுன்லோட் (Download) பண்ணச் சொன்னது. அதை செய்தேன். இதிலே வரும் சவுண்டை (Sound) எம்.பி.3க்கு (MP3) மாற்றி, என் மகனின் வெப்சைட்டில் (Web site) அப்லோட் (Upload) பண்ண முடியுமா?” என்று கேட்க, டொம் என்றொரு சத்தம். விழுந்தது நான் தான். ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு எழுந்து பதில் சொன்னேன். வினாக்கள் தொடர்ந்தன. அதிசயத்தில் விழி பிதுங்கி ஓரங்கட்டிக் கொண்டேன். இது உண்மையில் நடந்தது. இந்த சிந்தனை மாற்றம் ஓர் மகிழ்ச்சி தரக்கூடிய நாகரீக வளர்ச்சி என்று சொல்லலாம். புத்தகங்களை மற்றவரிடமிருந்து இரவல் வாங்குவதிலிருந்து, பேரூந்து ஏறி, நூலகசாலை சென்று அங்கே நான் தேடிய நூல் யாரிடமோ சென்றிருப்பதை அறிந்து என்னையே நான் திட்டுவது வரை, அதைவிட, மலையேற இந்தியா சென்ற என் பாட்டியிடம் வைரமுத்துவின் புதுக்கவிதைத் தொகுதி வாங்கும்படி கூற, அவர் ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் வாங்கிவந்து என் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பது வரை, அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட இந்த மென்வலை ஒரு நல்ல காரணியாக அமைந்து விடுகிறது.

மென்வலையைப் பாவிக்காமல் அல்லது பாவிக்கப் பயந்து வாழ்பவர்கள் அவசியம் இது பற்றி அறிய முயற்சிக்க வேண்டும். மென்வலை மிக இலகுவான பயன்படுத்தலைக் கொண்டதோடு, பயன்படுத்துனரின் வசதிகளை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதே இந்த தயாரிப்பு நிறுவனங்களின் முக்கிய சேவையாகவும் வளர்ந்து வருகிறது. உதவியை அழுத்திக் கேட்டால்தான் உதவி என்ற நிலை மாறி, எப்போதும் ஒரு மூலையிலே உதவி செய்தபடி ஒரு சிறு கட்டம், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பது மறைந்து, இப்போது மென்வலையே ஒருசில முன்மொழிதல்களைச் செய்கின்ற லாவகம், வகுப்பிற்கு சென்றோ அல்லது விலையுயர்ந்த நூல்களிலிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டிய பல விடயங்களை, மென்வலையில் நேரடி இலவச வகுப்புகள் மூலமே கற்றுக் கொண்டு பரீட்சையும் செய்துவிடத்தக்க இணையத்தள கற்பித்தல்கள், சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்ற நிலை மாறி, எந்த ஒரு வினாவையும் மென்வலையில் பதிந்து விட்டால், அது எந்தக் கேள்வியாக இருந்தாலும், இருபதிலிருந்து இருநூறு பேர்வரை முண்டியடித்துக் கொண்டு தங்களுக்கு இது குறித்துத் தெரிந்த கருத்துக்களையும் பதில்களையும் தந்து விடுகின்ற உறவாடல், அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அடுத்தவரின் விபரங்களைத் தங்கி வாழும் நிலை மறைந்து எனக்குத் தெரியும் என்று உரிமையோடு பதில் கொடுக்கக் கூடிய மனவளர்ச்சி, ஒரு மனக்கஸ்டம் என்றால் அதற்கு ஆறுதல் சொல்ல ஆயிரம் இணையத்தள முகம்தெரியா நண்பர் குழாம், எனக்குத் தெரியும் என்று நினைத்துக் கொண்டு முடித்துவிட ஆரம்பித்த வீட்டுவேலையில் இடையிலே ஏற்படும் தடங்கல்களை அப்போதே சரிசெய்து கொள்ள ஓர் அறிவுசார் நண்பன்(பி) என்று இன்னோரன்ன பல முகங்களைத் தன்னகத்தே கொண்டு, தனிமையைத் தொள்ளாயிரம் மைல்களுக்கப்பால் ஓரம்கட்டி, எங்களை எப்போதும் சமூகப் பிராணிகளாக வாழ்வதற்கு இந்த இணையத்தளம் பல மறைமுகப் பணிகளை 24 மணிநேரமும் செய்து வருகிறது.

இணையத்தளத்தில் ஈ-மெயில் அனுப்புகின்ற வசதி மிக அலாதியான ஒரு வாய்ப்பு. கடிதஉறை, முத்திரை, பிரயாணம் என்று எந்த ஒரு தேவையுமின்றி, மென்வலையில் மௌனமாக எப்படி சுகம் என்று ரைப் செய்துவிட்டு, ஒரு சொடுக்குச் சொடுக்கினால், மறு நிமிடம், பெறுநர் அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு, உடனடியாகப் பதிலும் அனுப்பி விடலாம். ஈ-மெயில் வசதி மிகச் சிறப்பானது. இப்போதெல்லாம், இலவசமாக ஈ-மெயில் முகவரிகளைத் தனியார் நிறுவனங்களிலிருந்து இணையத்தளங்கள் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம். கொட்மெயில் (Hotmail) யாகு (Yahoo) மெய்ல் , கனடா போன்றவையெல்லாம் பிரபலமான இலவச ஈ-மெயில் தளங்கள். இன்னும் ஏராளமான தளங்கள் இலவச ஈ-மெயிலை வழங்குகின்றன. இங்கே இவற்றைப் பெற்றுக் கொண்டு, அதனூடாக, இலவசமாகவே நாம் மெயில்களை அனுப்பலாம். அவுட்லுக் என்னும் ஓர் மென்உபகரணம் தற்போது மிகப் பிரபலம். இதனூடாக இணையத்தில் கடிதம் அனுப்பும் விடயத்தில் பல அநுகூலங்களைப் பெறலாம். பலரின் ஈ-மெயில் முகவரிகளைச் சேகரிப்பதிலிருந்து, அனுப்பும் கடிதங்களை பல வகையறாக்களாக, குழுக்களாகப் பிரித்து சேமிப்பது, புதிய ஈ-மெயில் வந்ததும் உடனே எமக்கு செய்தி தருவது, எழுத்துப்பிழைகளைத் திருத்துவது, அனுப்பியதில் தவறு என்று தெரிந்தால் உடனேயே மீளப் பெற்றுக் கொள்வது வரை எத்தனையோ வசதிகள் உண்டு. தமிழ் வார்த்தைகளையே அப்படியே ஆங்கிலத்தில் ரைப் செய்து அனுப்புவது இப்போது ஈ-மெயில் உலகில் பிரபலமாகி வருகிறது. உதாரணமாக, amma kaditham pottaavaa? Nalamaha irukkireerkalaa? என்றெல்லாம் கூட ஈ-மெயில் அனுப்பி சுகநலன்களைத் தெரிந்து கொள்ளலாம். வாசித்ததும் அழித்து விட்டால், எவரும் இந்தத் தகவல்களையும் அறிந்து கொள்ள எந்த வாய்ப்பும் இல்லை. அதனால் நண்பர்களுடன் உற்சாகமாகவே உரையாடலாம்.

இணையத் தளம் உண்மையில் ஒரு இனிய தோழன். நாம் எவ்வளவு நேரம் உறவாடினாலும், இந்தத் தோழனுக்கு சலிப்பு வராது, கோபம் வராது, உற்சாகம் குறையாது, ஏன், தோழமையுணர்விலும் மாற்றமே இராது. எதைக் கேட்டாலும் அந்த வினாடியே துள்ளிக்கொண்டு அத்தனை பதில்களையும் அள்ளி வரும் ஒரு தோழன் கிடைப்பானா என்றால் அதற்கு இணையத்தளம் என்ற ஒன்றை மட்டுமே பதிலாகக் கொடுக்க முடியும். இந்த விஞ்ஞான வளர்ச்சியை, விந்தையை, புதுமைகளை, அதன் வரைவிலக்கணங்களை, காரண காரியங்களை அறிந்து கொண்டு, அதன் பயனை முழுமையாக அனுபவிக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

தமிழர்களாகிய எம்மிடையே மிகப் பரவலாக வழக்கத்திலிருக்கும் பின்னர் பார்ப்போம், பிறகு பார்ப்போம், யோசிப்போம், இப்ப என்ன அவசரம், இந்த வயதில் இது தேவையா, பிள்ளை தோளுக்கு மேல நிற்குது – அடுத்தவன் சிரிப்பான், நாலுபேர் என்ன சொல்லுவினம் என்ற வேதவாக்குகளெல்லாம் இப்புலம்பெயர் மண்ணில் தவிடுபொடியாக்கப் படவேண்டியவை. இப்படிச் சொல்பவர்களில் பலர்கூட, அனைத்து விஞ்ஞான வளர்ச்சிகளையும் வீட்டிற்குள்ளே ஒழித்திருந்து அனுபவித்து வருபவர்கள் தான். அதனால், அடுத்தவர் பேச்சைக் கேட்காமல், நாமே முயன்று இவற்றை அறிந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்ற காலம் போய், நேரம் கூட இப்போதெல்லாம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்றாகிவிட்டது உலகம்.

இப்படியான விடயங்களைப் பற்றிப் பேசும்போது உடனடியாக நாம் சிந்திப்பது இதன் பணச் செலவைப்பற்றித்தான். இப்போதெல்லாம் வீட்டுத் தேவைக்கான கணணியின் (அனைத்தும் உள்ளடக்கம்) விலை மிகவும் குறைந்து விட்டது. புதியவைகளை, 500லிருந்து 1000 லொலர்களுக்குள் வாங்கி விடலாம். இந்தத் தொகை அதிகம் அல்லது சேகரிப்பில் இல்லை என்று தோன்றினால், கிட்டத்தட்ட 300 டொலர்களுக்கு, பாவித்த (ஆனால் நல்ல நிலையிலுள்ள) கணணியை வாங்கி, அதிலே அனைத்துப் பயன்பாட்டையும் பழகிக் கொண்டு, பின்னர் தேவையையும் வசதியையும் குறித்து கணனியின் தரத்தை சீர்செய்து கொள்ளலாம். கணனி வைத்திருப்பது அவசியம் என்பதேயொழிய, புதிய உயர்தர கணனி வைத்து என் அண்ணன் மனைவியின் கணனித் தரத்தை முந்துகின்ற வெற்றி உண்மையில் அவசியமற்றது. இது எங்களைக் கடன் தொல்லைகளுக்கும் தள்ளி விடலாம். அதனால், எங்கள் தேவைக்காக மட்டும் இவற்றைப் பெற்று, தினமும் குறைந்தது அரை மணி அல்லது ஒரு மணி நேரத்தை இதற்கென்றே ஒதுக்கி, நாமாகவே பலவற்றைக் கற்றுக் கொண்டு விட முடியும். இக் கணனியைப் பெற்றுக் கொள்ளும் முகவரிடமே, கணனியின் இயக்கம், அடிப்படைப் பாவனை, மென்வலைக்குச் செல்லும் வழி, திரும்பவும் வெளியே வந்து கணனியை அணைத்து விடுவது வரை கேட்டுத் தெரிந்து கொண்டு பெற்று வந்தால், மீதியை நாங்களாகவே கற்றுக் கொள்ளலாம். My Car, My Road, My Petrol (எனது கார், எனது வீதி, எனது எரிபொருள்) என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது, நாங்கள் தன்னம்பிக்கையுடன் முயல வேண்டும் என்பதைத் தான் சொன்னார்கள். முயற்சி திருவினையாக்கும், முயற்சியுடையான் இகழ்ச்சியடையான் என்ற இன்னும் ஏராளமான பழமொழிகளும் இதைத்தான் சொல்லுகின்றன. இவற்றைப் படித்து விட்டு, எப்போதும் போல், ஒரு பெருமூச்சு விட்டு, சா.. இதைக்கூடத் தவற விட்டுவிட்டேனே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் அட. . . இப்போது அறிந்து கொண்டோமே என்று மகிழ்ந்து, உடனே ஆனவற்றைச் செய்தால் இனிவரும் காலம் ஈ-இன்பமாக மாறிவிடும். மறந்து விடாதீர்கள்.

உங்கள் பிள்ளைகள் வளர்ந்து, சிறகு முளைத்துப் பறந்து விட்டார்கள். உங்களை ‘முதியவர்கள்’ என்று சொல்லாமல் சொல்கிறார்கள் என்றால், கவலை வேண்டாம். உடனே நீங்களாக, ஒரு பாவித்த கணினியைப் பெற்று, அதனை உங்கள் நண்பராக்கிக் கொள்ளுங்கள். அங்கே உங்களுக்குப் புதிய குழந்தைகள், பேரக்குழந்தைகள், பூட்டக் குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள், இணைந்து பல்லாங்குழி ஆட வினோத உறவுகள் என்று அனைவரும் கூடிக் காத்திருக்கிறார்கள். காலையில் சமய சம்பந்தமாக உரையாட வேண்டுமா? இருக்கவே இருக்கிறது தளங்கள். இந்து சமயத்தின் ஆழ அகலங்களை மிக விலாவாரியாகப் பேசி, கருத்துப் பரிமாற்றம் செய்கிறார்கள். மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, பொழுதுபோக்கு, வேறு அரட்டைகள், தமிழ்நாட்டின் அரசியல் முதல் சந்திரிகாவின் தொப்பி பிரட்டல்கள் அனைத்தையும் பார்த்து படித்து மகிழலாம், அறிந்து கொள்ளலாம். அடுத்தவர்களின் கலந்துரையாடல்களைப் படித்தே பல விடயங்களைத் தெரிந்து கொள்ளலாம். அத்தனை 24 மணிநேர வானொலிகளையும், சர்வதேச வானொலிச் சேவைகளையும் நேரடியாகக் கேட்டு மகிழலாம். 24 மணி நேரமும் சிரித்து மகிழலாம். . . .. புரிகிறது. ஆங்கிலம் தெரியாதே என்று யோசிக்கிறீர்கள். ஐயையோ . . நான் சொல்ல மறந்து விட்டேன். இப்போதெல்லாம் ஆங்கிலம் மென்வலையில் அதிகம் தேவையில்லை. ஆச்சரியப் படுகிறீர்களா? உண்மைதான். ஏற்கனவே நான் சொன்னதைப்போல், கணனி வாங்கும் இடத்தில், அதன் அடிப்படைகளை (தமிழில்) அறிந்து கொண்டு வந்து விட்டால், பின்னர், எல்லாம் தமிழிலேயே பார்க்கலாம், படிக்கலாம், அரட்டை அடிக்கலாம், சிரித்து மகிழலாம். குழப்பங்கள் சந்தேகங்களை தமிழிலேயே கேட்டு அறிந்து திருத்திக் கொள்ளலாம். இப்போது மகிழ்ச்சி தானே!!

இன்னுமொரு விடயத்தைப் பற்றிக் கவலைப் படுவது புரிகிறது. பல தீயவற்றையெல்லாம் மென்வலையில் பார்க்கலாமாமே ! கேட்கலாமாமே!! படிக்கலாமாமே!!!

ஆமாம். இது உண்மைதான். புத்தகக் கடைக்குப் போனால், ஒரு மூலையில் கறாரான புத்தகங்கள். வானொலியில் சில அலைகளைத் திருப்பினால் பல மிகக் கறாரான பேச்சுக்கள், தொலைக்காட்சியை அழுத்தினால் சில சானல்களில் கன்றாவியாகக் காட்டுகிறார்கள், ஏன் பஸ் நிலையத்திற்கு சென்றால், அங்கே பலேலான காட்சிகள், கடிதக்காரன் வீட்டுக் கதவிலே மாட்டிவிட்டுப் போன சித்திரத்தை விரித்தேன் – சிவசிவா இது என்ன கன்றாவி வெள்ளிக்கிழமையும் அதுவுமாய் என்று பாட்டியின் திட்டல். றோஸ் பாண் வாங்கப் போனபோது அங்கே நின்ற சிலரின் பேச்சுக்கள் எமக்கு வாந்தி வர வைக்கின்றன. இவற்றை யாரால் எது பண்ண முடியும். இதற்கு மென்வலை விதிவிலக்கல்ல. எல்லாம் நாம் நினைப்பதில் தான் அமைந்திருக்கிறது. தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசியெடுக்கும் என்ற புதுக்கவிதைக்கு ஒப்ப, எப்போதும் தேடுவோம். நல்லவற்றையே தேடுவோம், நல்லவையே கிடைக்கும். அன்னம் என்ற பறவையின் ஒப்புவமை எமக்குப் பொருந்தினால், அதை அழகாக அணிந்து கொண்டு, நீரை விலக்கி, பாலைப் பருகி, பழையன களைந்து, புதுயுகம் புகுந்து, விஞ்ஞானப் புதுமைக்குள் எம் மெய்ஞானம் வளர்த்து, வாழ்கின்ற காலம் வரை இனிதாக ஈ-தளத்தில் வாழ்ந்திடுவோம். ஈ-னிய வாழ்த்துக்கள்.

நன்றி. வணக்கம்.
குயின்ரஸ் துரைசிங்கம்
ரொறன்ரோ – கனடா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: